10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கணினி மூலம் எழுதும் புதிய வசதி: சிபிஎஸ்இ அறிவிப்பு

புதுடெல்லி: உடல்நலம் சரியில்லாத 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் இனி தங்களது பொதுத் தேர்வுகளை கணினி அல்லது லேப்டாப் மூலம் எழுதும் புதிய வசதியை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது.

சிபிஎஸ்இ சார்பில் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பொதுத்தேர்வுகளை கைகளால் எழுத்துப்பூர்வமாக மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கணினி அல்லது மடிக்கணினி மூலமாகவும் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற புதிய முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்துள்ளது. உடல்நலம் சரியில்லாத மாணவர்கள் இந்த புதிய முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. கணினி அல்லது லேப்டாப் மூலம் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் டாக்டரிடம் கட்டாயம் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

மேலும், மாணவர்களே தங்களது கணினி அல்லது லேப்டாப்களை எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி அல்லது லேப்டாப்களில் இண்டர்நெட் வசதிக்கு அனுமதி இல்லை என்றும் தேர்வுக்கு முன்னரே அதிகாரிகள் இவற்றை சோதனை செய்த பிறகே அனுமதிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த வசதியை பெற ஒரு மாணவரின் வருகைப் பதிவு 50 சதவீதம் மேல் இருக்க வேண்டும் என்றும், கணினியில் தேர்வு எழுத முன்கூட்யே அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய முறை வசதி இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என சிபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>