பள்ளி, கல்லூரிகளுக்கு 31ம் வரை விடுமுறை.. மால், தியேட்டர், பார்கள் அடைப்பு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச்16) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒரு பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் நான் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளேன்.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் வழியாக வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்குத் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின்படி, 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கத் தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.
அண்டை மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில் நோய் கண்காணிப்பு பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.
தனியார் மற்றும் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில், ரயில்வே, பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத்துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து, நான் மத்திய ரயில்வே அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனச் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் 31ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்லூரி தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் இம்மாதம் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.
மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் வரும் 31ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கக் கூடாது. திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்பட அனைத்து நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கப்படும் என்பதால், அதனை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடைக்கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிக கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த 31ம் தேதி வரை அனுமதி வழங்கக் கூடாது.
அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகள் போன்றவை வரும் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும். மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும்.
கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியைச் செய்தியாகவோ, சமூக வலைத்தளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்தியத் தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், அவ்வப்போது கைகளைச் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கைகளைச் சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம். குழந்தைகள் குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், அவ்வப்போது கைகளைச் சோப்பு போட்டு சுத்தமாகக் கழுவுவதை உறுதி செய்ய வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதைத் தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள சுகாதாரத்துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044 29510400, 044 29510500, 94443 40496 மற்றும் 87544 48477. அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை இன்று மூடப்பட்டுள்ளன.