பொருளாதார சுனாமி.. மத்திய அரசுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை..

இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார நிலை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், அதைப் பற்றி மோடி அரசு கவலைப்படுவதே இல்லை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பொருளாதாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமியும் கூறி வருகிறார்.

இந்நிலையில், ராகுல்காந்தி இன்று(மார்ச்17) நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியா இப்போது, கொரோனா வைரசைத் தடுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதைச் சரி செய்வதற்கு நாம் தயாராக வேண்டும். ஆனால், மத்திய அரசுக்கு இதைச் சரிசெய்வது பற்றி எதுவுமே தெரியவில்லை. இது ஒரு பொருளாதார சுனாமியாக வரப் போகிறது. உதாரணமாகச் சொன்னால், அந்தமான் நிகோபரில் சுனாமி வருவதற்கு முன்பு கடல் தண்ணீர் உள்ளே சென்றது. கடல் உள்வாங்கிய போது மக்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள். அதற்குப் பிறகு சுனாமி வந்தது. அதைப்போல்தான், இப்போது பொருளாதார சீர்குலைவுக்கான அடையாளம் தெரிகிறது.

நான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்கிறேன். மத்திய அரசில் யாரும் இதை பொருட்படுத்தவே இல்லை. பொருளாதார சீர்குலைவால், அடுத்த 6 மாதங்களில் மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் துன்பப்படப் போகிறார்கள்.இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

More News >>