அரசு, தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை
அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பை உருவாக்கிடத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று(மார்ச்17) எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவதுகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2,221 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை, அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்று. அரசின் சார்பில் அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். நோய் அறிகுறி பற்றி கண்டறியும் ஆய்வகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கும் கிங் நிறுவன ஆய்வகம் பரிசோதனை செய்ய வேண்டும். தனியார் ஆய்வகங்களும் இந்த ஆய்வை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். ஏழை - எளிய மக்களுக்கு அது பயன்படக்கூடிய வகையில் அதற்குரிய கட்டணத்தை, நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.விமான நிலையங்களுக்கு அருகிலேயே, நோய்க்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி, தங்க வைக்கக்கூடிய மையங்களை அனைத்து மருத்துவ வசதிகளுடனும் உருவாக்கிட வேண்டும். அதில் நாம் தாமதமாக இருக்கிறோமோ என்ற ஒரு அச்சம் இருக்கிறது.
மக்கள் நடமாட்டம் இல்லாத புறநகர்ப் பகுதியிலும், ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைக்கு அருகிலும் இடத்தை தேர்வு செய்து, மருத்துவ வசதிகள் அடங்கிய தனிமைப்படுத்தும் மையங்களைப் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தித் தரவேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆய்வகங்கள் போன்றவற்றில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தேவைப்படக்கூடிய அளவிற்கு முகக் கவசங்கள், சானிட்டைசர்கள், உள்ளிட்ட தற்காப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் உயிரையே பணயம் வைத்து சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோரும் வீட்டிலிருந்தே பணிபுரியக்கூடிய வாய்ப்பையும் உருவாக்கிட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டார். அவரும் குணமடைந்து வீடு திரும்புகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தாலி போன்ற நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆகவே கொரோனா வேகமாகப் பரவக்கூடிய நெருக்கடி ஏற்பட்டால், அதைச் சமாளிக்க அரசு தயாராக இருக்க வேண்டும்.அதேபோல் தனியார் மருத்துவமனை உரிமையாளர்களை அழைத்து, அரசு அவர்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நிதியைச் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு ஒதுக்கி தனியார் மருத்துவமனைகளையும் தயார்ப்படுத்தி வைக்க வேண்டும்.
இதுவரை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த எத்தனை பேருக்கு உள்ளூர் மற்றும் அயல்நாட்டு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது? ரயில்கள் மூலம் வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள்; அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகள்; பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருப்பவர்கள் எத்தனை பேர்? அதில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்த தகவல்களை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்க வேண்டும்.கொரோனா நோய் தடுப்பதில் அரசுக்கு நிச்சயம் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் தயார் நிலைக்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் உரையாற்றினார்.