உலகம் முழுவதும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் முதன் முதலாகக் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் பரவியுள்ள இந்த நோய் தாக்குதலில், அந்நாட்டில் மட்டும் இது வரை 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். 81,894 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 68,679 பேருக்குக் குணமாகியுள்ளது. உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று(மார்ச்17) வரை ஒரு லட்சத்து 84,976 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்றும், இது வரை 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல், உலக அளவில் 80 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 31,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. அங்கு 2508 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.ஈரானில் 16,169 பேர், ஸ்பெயினில் 11,309 பேர், ஜெர்மனியில் 9257 பேர், தென்கொரியாவில் 8320 பேர், பிரான்சில் 6,664 பேர், அமெரிக்காவில் 5702 பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று வரை 137 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நோய்க்கு 3 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. புனேயில் நேற்று 18வது நபர் கண்டறியப்பட்டு, தனி வார்டில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.