இந்தியாவில் 151 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு.. மகாராஷ்டிராவில் 42 பேர் பாதிப்பு

இந்தியாவில் இது வரை 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 135 நாடுகளில் பரவியிருக்கிறது. ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். சீனாவில் இதுவரை 81,894 பேருக்கு நோய்ப் பாதிப்பு தெரியவந்துள்ளது. இந்நாட்டில் 3237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2508 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். அங்கு 31,506 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. நேற்று(மார்ச்17) வரை 147 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அவர்களில் 122 பேர் இந்தியர்கள் என்றும் 25 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 5,700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக அம்மாநிலத்தில்தான் 42 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேரளாவில் 35 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 11 பேருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது. இது வரை இந்தியாவில் 3 பேர் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.

More News >>