எம்.பி.யாவது ஏன்? ரஞ்சன் கோகய் விளக்கம்..
ரபேல் முறைகேடு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ராஜ்யசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் வரவே அவர் அதற்கான காரணத்தைக் கூறினார்.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் அனில் அம்பானிக்குச் சாதகமாகப் பிரதமர் மோடி நடந்து கொண்டார் என்றும் இந்த விலை பேரத்தில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரித்து, ரபேல் விவகாரத்தில் அரசுக்கு கிளீன் சிட் அளித்தது. அதே போல், அயோத்தி வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு கூறியது. கடந்த நவம்பரில் ரஞ்சன் கோகய் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவரை ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். அசாமைச் சேர்ந்த கோகய் உடன் கல்வியாளர் மிரினாள் மிரி, மேகாலயாவைச் சேர்ந்த பி.ஆர்.டத்தா, மணிப்பூரைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம் உள்பட 12 பேர் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். ரஞ்சன் கோகய் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளும் ரஞ்சன் கோகய்யை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, ரஞ்சன் கோகய் கூறுகையில், நீதித்துறையின் பல்வேறு கருத்துக்களை ராஜ்யசபாவில் எடுத்து வைக்கும் வகையில் நான் இந்த எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டேன்என்றார்.