நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கை சீர்குலையும்.. முன்னாள் நீதிபதி கவலை..
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார்.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரித்து, ரபேல் விவகாரத்தில் அரசுக்கு கிளீன் சிட்அளித்தது. அதே போல், அயோத்தி வழக்கில் அரசுக்குச் சாதகமான தீர்ப்பைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு கூறியது. இதன்பின், கடந்த நவம்பரில் ரஞ்சன் கோகய் ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்று 4 மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரை ராஜ்யசபா நியமன எம்.பி.யாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். ரஞ்சன் கோகய் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளும் ரஞ்சன் கோகய்யை கடுமையாக விமர்சித்தனர். அவரது தீர்ப்புகள் தற்போது மக்களின் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்த போது, அவர் மத்திய பாஜக அரசுக்குச் சாதகமாக இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுப்ரீம் கோர்ட்டின் சுதந்திரத்தன்மை பறிபோய் விட்டதாக சமூக ஊடகங்களிலும் கடுமையான பதிவுகள் வந்தன.
அந்த சூழ்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்து 2,3,4,5வது சீனியாரிட்டியில் இருந்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகய், மதன்லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீனெர பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அவர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நியாயம் தவறி நடப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.
மத்திய பாஜக அரசு தொடர்பான வழக்குகள், மிகவும் பிரச்சினைக்குரிய வழக்குகளை சீனியாரிட்டியில் உள்ள தங்களிடம் விசாரிக்க அனுப்பாமல், குறிப்பிட்ட நீதிபதிகளுக்கே தலைமை நீதிபதி அனுப்புகிறார். இதனால், நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டிய நிலையில் பேட்டி கொடுக்கிறோம் என்று தெரிவித்தனர். அந்த சமயத்தில், அமித்ஷா மீதான குற்றவழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக மும்பை வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்த வழக்கும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்தது.
இதற்குப் பின்னர், தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகய் பொறுப்பேற்றார். தற்போது அவரே அரசுக்குச் சாதகமாக மாறிப் போய் விட்டதாகவும், அதற்காகவே அவருக்கு எம்.பி. பதவி தரப்பட்டிருப்பதாகவும் கடும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகக் குரல் கொடுத்த 4 நீதிபதிகளில் ஒருவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான குரியன் ஜோசப் கூறியதாவது:ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது சாமானியர்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து போயிருக்கிறது. நீதித்துறையின் மேன்மையைக் காப்பாற்ற எங்களுடன் சேர்ந்து உறுதியான குரல் கொடுத்த ரஞ்சன் கோகய், தற்போது நீதித்துறையின் பாரபட்சமற்ற, சுதந்திரமான கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு விட்டார்.
சில நீதிபதிகள் மத்திய அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பொதுவெளிகளில் பேச்சுகள் எழுந்த சூழலில், ரஞ்சன் கோகய் செயலானது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும். இவ்வாறு நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்தார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி கூறுகையில், ஒரு நீதிபதி ஓய்வு பெற்றபின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேறு எந்த பதவியிலும் அமரக் கூடாது. இல்லாவிட்டால் அந்த நீதிபதிகளின் தீர்ப்புகள் மீது நம்பிக்கை போய் விடும் என்று அருண்ஜேட்லி முன்பு கூறியிருந்தார். அதை ஏன் மோடியும், அமித்ஷாவும் கண்டுகொள்ளவில்லை. ரஞ்சன் கோகய் எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் அரசியல் சாசனச் சட்டத்தின் அடிப்படையே தகர்க்கப்பட்டிருக்கிறது. முன்பு, நீதிபதி ரங்கனாத் மிஸ்ரா ஓய்வு பெற்று ஐந்தாறு ஆண்டுகள் கழித்த பின்பே ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் என்றார்.