ஹர்திக் பாண்டியாவுக்கு கபில் தேவ் கொடுத்த பலே அட்வைஸ்!
By Rahini A
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உருவெடுத்து வருகிறார். பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் கலக்கும் பாண்டியாவை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் உடன் பலரும் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கபில் தேவ்வே தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பலே அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கபில் தேவ், `ஹர்திக் பாண்டியாவுக்கு திறமை இருக்கிறது. அதை அவர் நன்றாகவே வெளிக்காட்டியுள்ளார். ஆனால் அவரை மற்றவருடன் ஒப்பிடும் போது அழுத்தம் அதிகமாகும். அவர், கிரிக்கெட்டை இன்னும் நேசித்து, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர வேண்டும். அவர் ஆல்-ரவுண்டராக இருந்தாலும், தனது பேட்டிங் நேர்த்திக்காத்தான் இந்திய அணியில் இடம் பிடித்தார். எனவே அவர் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக அவரால் ஜொலிக்க முடிந்தால், கண்டிப்பாக அவரால் பௌலராகவும் ஜொலிக்க முடியும்' என்று அட்வைஸ் மழை பொழிந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்டியா முதல் டெஸ்ட்டில் 93 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் அந்தத் தொடர் முழுவதிலும் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்தே கபில் தேவ், பாண்டியாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.