ம.பி. முதல்வர் கமல்நாத் ராஜினாமா அறிவிப்பு.. சட்டசபையில் வாக்கெடுப்பு இல்லை..

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று ம.பி. முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 காலி இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்து விட வேண்டுமென்று பாஜக தீவிரமாகக் களமிறங்கியது.

காங்கிரசில் 22 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக மாறி பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, சட்டசபையில் காங்கிரசின் பலம் 114ல் இருந்து 92 ஆகக் குறைந்துள்ளது. சுயேச்சை 4 பேர், பகுஜன்சமாஜ் 2 பேர், சமாஜ்வாடி ஒருவர் என்று 7 பேரைச் சேர்த்தாலும் காங்கிரசின் பலம் 99 ஆக மட்டுமே இருக்கும். அதே சமயம், பாஜகவின் பலம் 106 ஆக உள்ளது.

இந்நிலையில், இன்று ம.பி. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ம.பி. தலைநகர் போபாலில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் கமல்நாத் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:ம.பி.யில் நடப்பதை எல்லாம் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை எல்லா மக்களுக்கும் தெரியும். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்திச் சென்று பெங்களூருவில் அடைத்து வைத்திருப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை(பாஜகவினர்) ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். பாஜக இந்த மாநிலத்து மக்களுக்குத் துரோகம் செய்து விட்டது. ஜனநாயகக் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்து விட்டது.

பாஜக ஆட்சியில் மாபியா கும்பல் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அந்த கும்பல் மீது நான் நடவடிக்கை எடுத்ததால், நாங்கள்(காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சித்து வந்தது. ஆனால், அவர்கள் என்னையோ, இந்த மாநிலத்து மக்களையோ எந்த வகையிலும் தோற்கடிக்க முடியாது.

நான் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட விரும்பவில்லை. கவர்னரை சந்தித்து எனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கிறேன்.இவ்வாறு கமல்நாத் கூறினார்.

More News >>