பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி.. மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முகக்கவசம் அடங்கிய சிறிய பெட்டிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் மக்கள் கூட்டமாக கூடும் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும், சட்டசபை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சட்டசபைக்கு இன்று காலை வந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு சட்டசபை செய்திகளை சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய பெட்டியை வழங்கினார். திமுக சார்பில் வழங்கப்பட்ட அந்த பெட்டியில், முகக்கவசம், சானிட்டைசர், டெட்டால் சோப் போன்ற கொரோனா தடுப்பு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், அச்சம் தவிர்ப்போம், அறிவியலால் வெல்வோம் என்ற பெயரில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டன.