இந்தியாவில் இது வரை 258 பேருக்கு கொரோனா.. மகாராஷ்டிராவில் அதிகம்
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் முதன் முதலாக கண்டறியப்பட்டது. சீனாவில் மட்டும் இது வரை இந்த நோய் தாக்குதலில், 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். 82 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் 135 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று(மார்ச் 19) வரை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று நோய் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 25, உத்தரப்பிரதேசத்தில் 23, கர்நாடாகா, ராஜஸ்தானில் தலா 15, அரியானாவில் 14, லடாக்கில் 13 பேர் என்று கொரோனா தொற்று பாதித்துள்ளது. தமிழகத்தில் இது வரை 3 பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், வெளிநாடுகளில் தமிழகத்திற்கு திரும்பிய நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.