கொரோனா பாதித்த பாடகி கனிகா கபூர் மீது போலீசார் வழக்கு..

கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிகளில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவின் மகன் துஷ்யந்த் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பங்கேற்றனர். கனிகா கபூருடன் இரவு விருந்திலும் பங்கேற்றனர்.

இதற்கு பின்னர், கனிகா கபூருக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் சமீபத்தில்தான் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்திருக்கிறார். அதனால்தான், அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அவர் இன்ஸ்டகிராமில் தெரிவித்தார். இந்த தகவல் வெளியானதும், கனிதா கபூர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற வசுந்தரா ராஜே சிந்தியா, அவரது மகன் துஷ்யந்த் சிங் ஆகியோர் தாங்களாகவே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே, லக்னோ நிகழ்ச்சிக்குப் பிறகு துஷ்யந்த் சிங், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளித்த காலை விருந்தில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு அவர், நாடாளுமன்றக் குழு கூட்டத்திலும் பங்கேற்றிருக்கிறார். இதனால் மற்ற எம்.பி.க்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் வந்துள்ளன.

இதையடுத்து, கனிகா கபூர் மீது போலீசார், இ.பி.கோ. 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More News >>