பீகாரில் கொரோனாவுக்கு ஒரு இளைஞர் சாவு.. பலி 6 ஆக உயர்ந்தது

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 38 வயது இளைஞருக்கு கொரேனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து கொரோனா பலி 6 ஆக உயர்ந்தது. மேலும், 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவன புள்ளி விவரப்படி, நேற்று(மார்ச் 21) வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 95,824 பேர் குணமடைந்திருக்கிறார்கள். 13,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று வரை 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, உ.பி. மாநிலங்களில் அதிகமானோருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் 3 வெளிநாட்டினர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் கொல்கத்தாவிலிருந்து சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்றும் டாக்டர் பிரபாத்குமார் சிங் தெரிவித்தார். மேலும், அந்த வாலிபர் சமீபத்தில் கத்தாரில் இருந்து திரும்பி வந்தவர் என்று தெரியவந்துள்ளது.இத்துடன் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், இது வரை 341 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

More News >>