கொரோனா தடுப்பு நிதிக்கு மேலும் ரூ.500 கோடி.. முதல்வர் அறிவிப்பு

கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இன்று(மார்ச்23) காலை வரை 415 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. இது வரை 18.383 பேருக்கு மாதிரி எடுத்துப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், நூற்றுக்கணக்காணோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை ஆய்வு செய்து வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் 82 மாவட்டங்களை மற்ற மாவட்டங்களுடன் தொடர்பு இல்லாமல் முடக்கி வைக்க உத்தரவிட்டிருக்கிறது.தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பேரவை விதி 110-ன் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, கொரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த வாரம் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின்படி, ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>