கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை.. மத்திய அரசு எச்சரிக்கை..
முடக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இன்று(மார்ச்23) காலை வரை 415 பேருக்கு கொரோனா நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. இது வரை 18.383 பேருக்கு மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகம் பரவும் வாய்ப்புள்ள மாவட்டங்களாக 82 மாவட்டங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது. இந்த 82 மாவட்டங்களையும் முடக்கி வைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்லக் கூடாது. அதே போல், வெளிமாவட்டங்களில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு வாகனங்கள் செல்லக் கூடாது. மேலும், இம்மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற செயல்பாடுகள் அனைத்து முடக்கி வைக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
ஆனால், சில மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாகப் பின்பற்றவில்லை என்று பிரதமர் அலுவலகத்திற்குப் புகார்கள் சென்றுள்ளன. இதையடுத்து, பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட் பதிவில், பலர் இந்த மாவட்ட முடக்கத்தை அலட்சியமாகக் கருதுகிறார்கள். அப்படியில்லாமல் நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்ற குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.