`எங்களைச் சீண்டினால் திருப்பி அடிப்போம்! - வீடியோ போட்டு மிரட்டிய ரஷ்ய அதிபர்
By Rahini A
சிரியாவில் போர் உச்சக்கட்டததை எட்டியுள்ளது. தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் கொத்துக் கொத்தாகச் செத்து வருகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் சிரிய அரசுக்கு ரஷ்யா வழங்கும் ஆயுதங்கள்தான் என்று சர்வதேச ஊடக நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், தன் நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களை வீடியோ போட்டுக் காட்டியுள்ளார் ரஷ்ய அதிபர் புடின். மேலும் அவர், தன் எதிரி நாடுகளுக்கு சவால் விடும் தொனியிலும் பேசியுள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய புடின், `தற்போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அணு ஆயுதங்கள் உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கக் கூடிய திறன் படைத்தவை. எனவே ரஷ்யாவுக்கோ அதன் நேச நாடுகளுக்கோ யாரேனும் அச்சுறுத்தல் விடுத்தாலோ தாக்குதல் நடத்தினாலோ உடனடியாகத் திருப்பி அடிப்போம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்' என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியுள்ளார். அவர் இதைப் பேசும் போது பின்னணியில் புதிய அணு ஆயுதங்களின் செயலாக்கம் ஒரு பெரும் திரையில் வீடியோவாக ஓடியது.
சிரிய போரில் பலர் ரஷ்யாவை குற்றம் சாட்டி வரும் நிலையில், புதின் இப்படிப் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இம்மாதம் 18-ம் தேதி ரஷ்யாவில் அதிபர் தேர்தல் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.