ஏர்செல் திவாலாக ரிலையன்ஸ் தான் காரணமா? - டிராய் மீது குற்றச்சாட்டு
By Lenin
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் TRAI)) செயல்படுவதாக ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
புதிதாக வந்துள்ள (ஜியோ) தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விதிமீறல்களை, டிராய் கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே, ஏர்செல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் உடனான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்களே திணறி வருகின்றன. தற்போது வேறுவழியின்றி, ரீசார்ஜ் பேக்குகள் மீது இந்த நிறுவனங்களும், விலைக்குறைப்பையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.
ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல், சிலமாதங்களுக்கு முன்பு ரூ. 2 ஆயிரத்து 649கோடியை கையிலிருந்து போட்டது. அப்படியிருந்தும் ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
மற்றொரு புறத்தில், போட்டியைச் சமாளிக்க முடியாத ஏர்செல், திவாலாகி விட்டது. ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல் மூடப்படுவதாக டிராய் அமைப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடி வருவதாகவும், அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள், விலைக்குறைப்பு, சலுகைகளில் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையமான ‘டிராய்’ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் புலம்பியுள்ளார்.
வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோவும், சுனில் மிட்டலின் கருத்தை ஆதரித்துள்ளார்.