ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி.. தொழிலாளர்களுக்கு இழப்பீடு.. முதல்வர் அறிவிப்பு

கொரோனா தடுப்புக்காக 144 தடை விதிக்கப்பட்டதால் ரூ.3250 கோடிக்கு நிவாரண உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் இது வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், 12,519 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோன வைரஸ் பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று(மார்ச்23) சட்டசபையில் அறிவித்தார்.

இதற்கிடையே, சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் அவசரமாக முடிக்கப்படுகிறது. கடைசிநாளான இன்று, சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால், வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும்.

நடைபாதை வியாபாரிகளுக்கு பொது நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயும், கூடுதலாக ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும்.

ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். மேலும், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மார்ச் மாதத்திற்கான ரேசன் பொருட்களை ஏப்ரல் மாதத்தில் கூட பெற்றுக் கொள்ளலாம்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். மேலும், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

அதே போல், நடைபாதை வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூடுதலாக 2 நாள் சம்பளம் வழங்கப்படும்.

இது போன்ற, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

More News >>