பணியாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் தந்த நடிகர்.
கொரோனா பரபரப்பால் அட்வான்ஸ்..
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பணியாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை அட்வான்ஸாக தந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் வேலை இழந்துள்ளனர்.
இதனால் அவர்களது சம்பளம் கேள்விக் குறியாகிவிட்டது. இந்த நிலைமை தனது ஊழியர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
இதுபற்றி அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மெசேஜில், 'கொரோனா பாதிப்பு... எனது கையிருப்பு பணத்தை பார்த்தேன். அதை வைத்து எனது பண்ணை, வீடு மற்றும் திரைப்பட புரொடக்ஷன் பிரிவில் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வரும் மே மாதம் வரை சம்பளத்தை அட்வான்ஸாக தந்துவிட்டேன். 3 படங்கள் தயாரிக்கிறேன். அதன் பணிகள் நின்றிருக்கிறது. அதில் பணியாற்றும் தினச் சம்பளக்காரர்களுக்கு அரை சம்பளம் தர முடிவு செய்திருக்கிறேன்.
இது போதாது, என்னால் இன்னும் எவ்வளவு முடியுமோ அதை செய்வேன். உங்களைச் சுற்றி தேவையுள்ளவர்களுக்கு நீங்களும் உதவுங்கள். இதுதான் வாழ்க்கையில் நாம் திருப்பி தர வேண்டிய நேரம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய நேரம்' என குறிப்பிட்டிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.