வைபவ் பட இயக்குனர் திடீர் கோபம்.. மூடர்கள் சூழ் இந்தியா..
வைபவ் நடித்த மேயாத மான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அடுத்து அமலாபால் நடித்த ஆடை படத்தை இயக்கினார். இவர் இந்தியாவை நினைத்தால் பயமாக இருக்கிறது என அச்சம் தரும் மெசேஜ் பகிர்ந் திருக்கிறார்.
கொரேனா வைரஸ் பரவுவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளயே இருக்கும்படி அரசு தெரிவித் திருந்தது. அதேசமயம் டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரவர்கள் வீட்டிலிருந்து கைதட்ட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். ஆனால் இதையொரு விழாபோல் மக்கள் ஆங்காங்கே கூடி கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஒன்றாகக்கூடக்கூடாது, அப்படி கூடினால் கொரோனா பரவும் என்பதால் வீட்டில் இருக்க உத்தரவிட்டும் அதை மீறி மக்கள் கூடியது பலதரப்பினரை அதிருப்தியில் ஆழ்த்தியது. இணைய தளத்தில் இதுபற்றி மீம்ஸ் பகிர்ந்து வசை பாடி வருகின்றனர்.
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் ரத்ன குமார், 'போராட வர சொன்னால் வீட்டில் இருந்துகொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.' என கோபமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.