கொரோனாவை கட்டுப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் கொரோனாவை பரவவிடாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(மார்ச் 24) தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:உலகை அச்சுறுத்தும் கொரோனாவை நமது நாட்டில் பரவ விடாமல் தடுக்க ஒரு நாள் மக்கள் ஊரடங்கை நாம் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறோம். இந்த நோயை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மட்டுமே ஒரே வழியாகும். வேறு எந்த வாய்ப்புமே இல்லை.
நாம் கொரோனா பரவக்கூடிய சங்கிலித் தொடர்பை துண்டிக்க வேண்டும். எனவே, எல்லோரும் இதை மிகவும் கட்டுப்பாடாக பின்பற்ற வேண்டும். நாம் மற்ற நாடுகளில் இருந்தும், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களில் இருந்தும் கற்றுக் கொள்ளவேண்டும். இந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நீடிக்கும்.மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவே கூடாது.
வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படும். அதனால், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உங்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இப்போது பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம். இதில் பொறுப்பில்லாமல் செயல்பட்டால் நாட்டிற்கே பேராபத்து ஏற்படும்.
நம் உயிரை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரை பணயம் பணயம் வைத்து பணியாற்றும் சுகாதார ஊழியர்களை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்.கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மக்கள் வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்பவேக் கூடாது. மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், எந்த மருந்தையும் சாப்பிடக் கூடாது. முழு கட்டு்ப்பாட்டுடன் இருந்து மக்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த மிகப் பெரிய சவாலில் நாம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.