நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை - நீதிபதி வேதனை காவல்துறைக்கு கண்டனம்
பொதுமக்கள் மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதை கண்கூடாக பார்த்தேன் என்று நடைபாதையில் பேனர் வைத்த வழக்கில் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக சாலையை மறைத்து பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதிக்கு புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சென்னை அவ்வை சண்முகம் சாலை முதல் டிடிகே சாலை வரையும், சென்னை பலகலைக்கழகம் முதல் ரிசர்வ் வங்கி வரையும் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றக் கோரி காவல் துறைக்கு அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.
இந்த, மனு அடிப்படையில் உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, பேனர்களை அகற்றாமல் காவல் துறையும் மாநகராட்சியும் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் தான் ஒவ்வொரு முறையும் விமான நிலையம் செல்லும் போதும், நடைபாதை முழுவதும் குறுக்காக பேனர் வைத்திருப்பதை பார்த்துள்ளேன். இதனால் பொதுமக்கள் மாணவர்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதை கண்கூடாக பார்த்தேன் என்றும் தெரிவித்தார். இதனால் சாலைகளில் உள்ள வழிப் பலகைகள் கூட தெரியவில்லை என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பேனர்களை உடனடியாக அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.