கதறி அழுத ஸ்ரீதேவி - மயிலு பிளாஷ்பேக் மனம் திறக்கும் பாரதிராஜா
16 வயதினிலே படத்தின் நாயகியாக ஸ்ரீதேவி தேர்வு செய்த அனுபவத்தை இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. நாயகன் சப்பாணியாக கமலும், வில்லன் பரட்டையாக ரஜினியும், நாயகி மயிலாக ஸ்ரீதேவியும் நடித்த இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம்.
இந்நிலையில், 16 வயதினிலே படத்தின் நாயகியாக ஸ்ரீதேவி தேர்வு செய்த அனுபவத்தை இயக்குநர் பாரதிராஜா பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், ”நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவி படித்தாள். அவள்தான் என் கனவுலகப் பிரதேசத்தின் மயில். அவளை நான் உயிருக்கு உயிராகக் காதலித்தேன். ஆனால் அவளோ என் காதலை நிராகரித்து விட்டு, என்னை நிர்க்கதியாக விட்டுச் சென்றுவிட்டாள்.
உண்மை வாழ்வில் நான்தான் சப்பாணி. அவள்தான் மயில். நான் துரத்தித் துரத்திக் காதலித்த அந்தக் காதல் நிறைவேறாமல் போயிற்று. அதனால்தான் என் படத்தில் அவர்களின் காதலை நான் நிறைவேற்றி வைத்தேன்.
முதலில் இந்தப் படத்திற்கு நாகேஷை சப்பாணியாகவும், ரோஜா ரமணியை மயிலாகவும் கற்பனை செய்து வைத்திருந்தேன். எங்கள் ஊர் மயிலுக்கு ரோஜா ரமணியின் சாயல் பொருந்தாமலிருந்தது. அந்தப் பாத்திரத்தில் யாரை நடிக்கவைப்பது என்று நான் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது மலையாளத்தில் ஐ.வி.சசி படத்திலும் பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்திலும் நடித்துக்கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. அவரது புகைப்படத்தைப் பார்த்தபோது, இவள்தான் என் மயில் என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஸ்ரீதேவியின் வீடுதேடிப்போய்க் கதை சொன்னேன். ஒவ்வொரு காட்சியாக விளக்கினேன். முழு கதையையும் சொல்லி முடித்ததும் என் நிபந்தனைகளை அவரிடமும் அவர் அம்மாவிடமும் சொன்னேன்.
என் மயில் அசலான கிராமத்துப் பெண். எனவே, தலையில் விக் வைக்கக்கூடாது என்றேன். ஸ்ரீதேவி அதிர்ச்சியடைந்து என்ன சார் சொல்றீங்க என்றார். மேக்அப் இல்லை, பருத்தித் துணி பாவடைதான் என்றெல்லாம் சொன்னபோது, இருவர் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகைகள் அலையலையாய்த் தோன்றின. ஒருவழியாக 16 வயதினிலே படத்தில் நடிக்க ஸ்ரீதேவி ஒப்புக்கொண்டார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்று நட்சத்தி ரங்கள் ஒப்பந்தமானார்கள்.
கறுப்பு - வெள்ளையில் படத்தை எடுப்போம் என்றுதான் முதலில் சொன்னார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு. அதன் பின்னர்தான் வண்ணப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் மட்டும் தங்க தனித்தனி அறைகள் கிடைத்தன. நானும் ரஜினியும் விராண்டாவிலேயே பாய் விரித்துப் படுத்துக்கொள்வோம். ரஜினி அப்போதே படங்கள் நிறைய வைத்திருந்தார். பிசியாக இருந்தார்.
எனக்கு மிகவும் பிடித்த செந்தூரப்பூவே பாடல் காட்சியில் வெள்ளைத் தாவணியில் ஸ்ரீதேவி வாயசைத்தபோது மிகவும் மகிழ்ந்து போனேன். பொதுவாக நடிகைகள் படப்பிடிப்பு எப்போது முடியும் எப்போது வீட்டுக்கு ஓடலாம் என்றுதான் பார்ப்பார்கள். ஆனால் ஸ்ரீதேவி அப்படியல்ல. படப்பிடிப்பெல்லாம் முடிந்தபிறகும் அந்தக் கிராமத்தை விட்டுப்பிரிய மனமில்லாமல் கதறி அழுதார் ஸ்ரீதேவி. அவருடைய அம்மா எவ்வளவோ சமாதான முயற்சிகள் செய்தும் பலனில்லை.
எனக்குக்கூட பல படங்களில் அப்படியான மனநிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போதுகூட ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பை துருக்கியில் முடித்துவிட்டு அந்த இடங்களை விட்டு அகல முடியாமல் கண்ணீர் மல்க சென்னை திரும்பினேன். 16 வயதினிலே படத்தில் மிகவும் பிரமாதமாக நடித்த மயிலு இப்போது உயிருடன் இல்லை. மனசு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
அப்போது கமல்தான் பெரிய நடிகர். அவருக்கு 29 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம். ரஜினிக்கு வெறும் 3 ஆயிரம்தான். மொத்தமே 5 லட்சம் ரூபாய் செலவில் 16 வயதினிலே படத்தை எடுத்துமுடித்தோம். அந்தப் படத்தை இந்தியில் எடுக்க என்னை அணுகியபோது நாயகனாக அமோல் பலேகரை ஒப்பந்தம் செய்தோம். நாயகிக்கு பலரையும் பரிந்துரை செய்தார்கள்.
ஆனால் நானோ ஸ்ரீதேவி நடித்தால் தான் நான் இயக்குவேன் என்றேன்.சார் எனக்கு இந்தி சுத்தமாக வராது. பம்பாய்பார்த்ததே இல்லை. என்னை விட்டுடுங்க சார் என்று கெஞ்சினார் ஸ்ரீதேவி. நான் தைரியம் சொல்லி நடிக்க வைத்தேன். அமோல்பலேகர் அவருக்கு இந்தி சொல்லிக்கொடுத்தார். இப்போது அந்த மக்களே வியக்கும் அளவுக்கு தானே டப்பிங் பேசுமளவுக்கு கற்பூரப்புத்தி கொண்ட திறமைசாலி என்று நிரூபித்தார்.
நான் எத்தனையோ நாயகிகளைத் தமிழில் அறிமுகம் செய்திருக்கிறேன். அதில் ஸ்ரீதேவி யாரோடும் ஒப்பிட முடியாத அபூர்வத் திறமை கொண்டவர். இந்திய சினிமா உலகில் வைஜெயந்தி மாலாவுக்கு, பத்மினிக்கு, சாவித்திரிக்குக் கிடைக்காத புகழ் அனைத்தையும் பெற்றவர் ஸ்ரீதேவி” என நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார் பாரதிராஜா.