வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் கொளுத்தும் - வானிலை மையம் எச்சரிக்கை

இந்தாண்டு கோடைக்காலத்தில், வெயில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், "மலைப்பகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில்கூட வழக்கமான அளவை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரலாம். தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வழக்கமாக நிலவும் வெப்ப அளவை விட 1 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமாக வெப்பம் நிலவும்.

தமிழ்நாடு, தெற்கு கர்நாடக உள்பகுதிகள், ராயலசீமா ஆகியபகுதிகளிலும் நடப்பு கோடையில் வெப்ப அளவு 0.5 டிகிரி செல்சியஸிலிருந்து 1 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல், கிழக்கு, மேற்கு ராஜஸ்தான், உத்தரகண்ட், கிழக்கு மேற்கு உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், விதர்பா, குஜராத், அருணாச்சல் ஆகிய மாநிலங்களில் கடும் கோடை எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், கடல் மேற்புற வெப்ப நிலை அதிகரிப்பே, கோடை வெயிலுக்கு காரணம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனிடையே, கடந்த செவ்வாயன்று பாலக்காடு முதல் மும்பைவரை இந்தியாவின் பல பகுதிகளில் 35 டிகிரி செல்சியஸூக்கும் அதிகமான வெயில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More News >>