டெல்லியில் தினமும் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு..
டெல்லியில் தினமும் 2 லட்சம் பேருக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. நாளை முதல் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கவுள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உலகை ஆட்டிப்படைக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா, இந்தியாவில் இது வரை 724 பேருக்கு தொற்றியிருக்கிறது. 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். டெல்லியில் இது வரை 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் 29 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 10 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள்.இந்நிலையில், டெல்லி ஆம் ஆத்மி அரசின் முதல்வர் கெஜ்ரிவால் இன்று(மார்ச்27) நிருபர்களிடம் கூறியதாவது:கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசே உணவு வழங்கி வருகிறது. தற்போது 325 பள்ளிகளில் மொத்தம் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம் நடைபெறுகிறது.நாளை முதல் 4 லட்சம் பேருக்கு மதியமும், இரவும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உணவு விநியோக மையங்களை தயார் செய்து வருகிறோம். மக்களுக்கு காய்கறி, மளிகைச் சாமான்கள் 24 மணி நேரமும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம். கொரோனா பரவாமல் தடுக்க அதிகமானோருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.