கமல்ஹாசன் வீட்டில் கொரோனா தனிமைப்படுத்தல் நோட்டீஸ்

சென்னை மாநகராட்சி ஒட்டியதால் பரபரப்பு...

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்தி வருகிறார். இவரது வீடு சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம் சாலையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை மாநகராட்சி சார்பில் அவரது வீட்டு சுவற்றின் மீது ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில் மார்ச் 10ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் கமல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் கமல்ஹாசனைப் பொருத்தவரை அவர் ஏற்கனவே தனி வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு இருப்பதாக அவரது மகள் ஸ்ருதி ஹாசன் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மேலும் தானும் (ஸ்ருதி), தங்கை அக்‌ஷரா ஹாசன், தாய் சரிகா ஆகியோரும் வெவ்வேறு வீடுகளில் தனிமையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி இன்று கமல் வீட்டின் மீது நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் தீயாகப் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்துக்குப் பலரும் தொடர்பு கொண்டு விசாரித்தனர். மேலும் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டை வீட்டில் இல்லை என்றும் அவர் வேறு இடத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பல்வேறு குழப்பம் ஏற்பட்டதையடுத்து சென்னை மாநகராட்சி பின்வாங்கியது. கமல் வீட்டின் மீது ஒட்டிய நோட்டீஸை மாநகராட்சி ஊழியரே கிழித்தார். அதன் பின்னர் பரபரப்பு அடங்கியது.கொரோனா தொற்று வராமல் தங்களைப் பாதுகாப்பாக எப்படி மக்கள் வழிமுறைகள் கடைப் பிடிக்க வேண்டும் என்பது பற்றி சில தினங்களுக்கு முன் கமல் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கொரேனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து கமல் டிவிட்டர் பக்கத்தில்,'உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில் அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெரு முதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே அவனை உதாசனித்தவர் பதவி இழப்பர் இது சரித்திரம் எனக் குறிப்பிட்டு ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார்.பின்னர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு என் வீடாக இருந்த கட்டிடத்தைத் தற்காலிகமாக மக்களுக்கான மருத்துவ மய்யமாக்க மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால் அதைச் செய்யத் தயாராகக் காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் கமல் வீட்டில் நோட்டீஸ் ஓட்டியது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அளித்த விளக்கத்தில், 'கமல் வீட்டில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டியதில் சிறு தவறு நடந்துவிட்டது. . இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது பற்றி கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.'அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாகத் தனிமைப்படுத்து தலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

More News >>