ஊரடங்கு உத்தரவுக்காக மன்னிப்பு கேட்கிறேன்.. வேறு வழியில்லை என்றார் மோடி.
கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களைப் பாதுகாப்பதற்காகவே தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து நாம் புரியும் போர் மிகவும் கடினமானது. ஆனாலும், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க நாம் மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. ஊரடங்கின் போது மக்கள் யாரும் வேண்டுமென்றே அதை மீறுவதில்லை. ஆனாலும், கொரோனாவின் அபாயம் பற்றி அறியாத பலர் ஊரடங்கை மீறி வெளியில் செல்கிறார்கள். அவர்கள், தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளும் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிவேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்னும் சில நாட்கள் இந்த சிரமங்களைச் சமாளித்துக் கொள்ளுங்கள். இந்த கொரோனாவை ஒழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து நமக்காக பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்,