சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு..

சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 979 ஆக உள்ளது. தற்போது, ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைகள் மூடப்பட்டு, ரயில்கள், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழில், ஓட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், உணவு மற்றும் தங்கும் இடமும் இல்லாமல் சாலைகளில் தவிக்கின்றனர். ஆனால், இது டெல்லியில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், அரியானா, உ.பி, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். வழியில் உணவு கிடைக்குமா என்ற சந்தேக சூழலில் இப்படி செல்வது அவர்களின் உயிருக்கே ஆபத்தானது.

இதனால், டெல்லியை விட்டு கூட்டம், கூட்டமாக வெளியேற வேண்டாம் என்றும், அனைவருக்கும் மதியம், இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் டெல்லி அரசு கூறியிருக்கிறது. அதே போல், டெல்லியில் 400க்கும் அதிகமான மையங்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக நடந்து செல்கின்றனர்.இதையடுத்து, ஊர் திரும்பும் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு அளித்துள்ள பேரிடர் நிதியைப் பயன்படுத்தவும் கூறியுள்ளது.

More News >>