எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் ரூ 1500 கோடி ஊழல் ? - பரபரப்பு புகார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் அரசு ஒப்பந்த பணிகளை முறைகேடாக எடுத்து ரூ 1,500 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றசாட்டை தெரிவித்திருக்கின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவையொட்டி அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓர் அணியாகவும், டி.டி.வி. தினகரன் தலைமையில் சிலர் ஒர் ஆணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை போட்டியின்றி அவரின் உறவினர்களுக்கே வழங்கி, அதன் மூலம் ரூ 1500 கோடி ஊழல் செய்திருக்கின்றனர்.
அதற்கான ஆதாரம் இருப்பதாக டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏகள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி அதற்கான ஆதாரத்தையும் காண்பித்தனர்.
இதற்கிடையே காவல்துறையினர் தங்கதமிழ்செல்வன் மற்றும் வெற்றி வேல் ஆகியோர் மீது அனுமதியின்றி தலைமை செயலகத்தில் பேட்டி கொடுத்தது, அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது என்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் தற்போது தங்க தமிழ்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க இருவரையும் தேடி வருகின்றனர்.