கொரோனா தடுப்பு பணி.. திமுக சார்பில் ரூ.1 கோடி ஆன்லைனில் அனுப்புகிறது..

கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் நேற்று மாலை நிலவரப்படி, மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி 67 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், நோய் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்கள் நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது.

இந்நிலையில், திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் இந்த நிதி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும். இதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 கோடி வரை அளித்துள்ளனர்.

More News >>