முதல்வரை பாராட்டிய திமுக விவசாய அணி மாநில செயலாளர் நீக்கம்..
முதல்வரைப் பாராட்டிய, திமுக மாநில விவசாய அணிச் செயலாளர் கே.பி.ராமலிங்கத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கே.பி.ராமலிங்கம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த சமயத்தில் அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவைத் தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த இவர் திமுகவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்திருக்கிறார். திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார். திமுகவில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்த கே.பி.ராமலிங்கம், அழகிரி நீக்கப்பட்ட பிறகு சிறிது நாட்கள் ஒதுங்கியிருந்தார். அதன்பின், ஸ்டாலின் தலைமையை ஏற்று, மாநில விவசாய அணிச் செயலாளர் பொறுப்பில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், இவர் திடீரென திமுகவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார். நேற்று(மார்ச்29) அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டியிருந்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வீடியோ கான்பரன்சில் சர்வ கட்சித் தலைவர்களிடமும் முதல்வர் ஆலோசிக்க வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரியிருந்தார். இந்த கோரிக்கையைத் தேவையற்றது என கே.பி.ராமலிங்கம் கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து, கே.பி.ராமலிங்கத்தை விவசாய அணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் திமுகவில் மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டதாகவும், அது கிடைக்காததால் அதிமுகவுக்குக் கட்சி தாவத் திட்டமிருப்பதாகவும் பேசப்படுகிறது.