எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்.. திரைப்பட இயக்குனர் அபாயக் குரல்..

யதார்த்த இயக்குனர் தங்கர் பச்சான். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். நீண்டுச் செல்லும் அந்த அறிக்கையில் சில கோப, உருக்க தருணங்கள் இதோ..சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் 'கொரோனா' எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத் தொடங்கின. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது. லட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும்படி நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்கிடையில் கொரோனா வைரசிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளச் சொல்லி அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அந்நாட்டு மக்களுக்கு அறிவித்தார். 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை ஊடகச் செய்திகளை பின் நோக்கிப் பார்த்தால் புரியும்.

இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்தி களை வெளியிட்டுக் கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்தியப் பிரதமரையும், ரஜினிகாந்த்தையும் துரத்திக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறை பட்டுக் கொள்கிறார்கள்.இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப் போகிறார்கள்? ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச் சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரிய வில்லை. நிலைமை மீறும் பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்.

இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம். இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள உதவித் தொகையும், உணவுப் பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவ தில்லை. நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப் பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்.

இவ்வாறு தங்கர் பச்சான் கூறி உள்ளார்.

More News >>