10 லட்சம் அமெரிக்கர்களுக்கு கொரோனா பரிசோதனை.. அதிபர் டிரம்ப் தகவல்..
அமெரிக்காவில் இது வரை 10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் ஒரு லட்சத்து 64,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 3170 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில்,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று(மார்ச்30) வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான தடை நீடிக்கும்.
இது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு கோவிட்19 பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான மைல்கல் ஆகும். கொரோனாவை எதிர்த்த போரில் அனைவருக்கும் கடமை உள்ளது. இனி வரும் நாட்கள் மிகவும் சவாலானவை. எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் இதற்குச் சரியான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.