முஸ்லிம் மத மாநாடு மூலம் பரவியது கொரோனா வைரஸ்.. 24 பேருக்கு தொற்று உறுதி

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த முஸ்லிம் மத மாநாட்டில் பங்கேற்ற தாய்லாந்து, இந்தோனேஷிய பிரதிநிதிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. இந்தியாவில் 1251 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டின் மூலம் பலருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 15ம் தேதியையொட்டி, தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 250 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அமைப்பின் மஸ்ஜித் ஆறு மாடிக் கட்டிடத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது.

இதனால், சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் கொரோனா வைரஸ், டெல்லி பிரதிநிதிகளுக்குப் பரவியிருக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நிஜாமுதீன் பகுதிக்கு டெல்லி போலீசார் சீல் வைத்துக் கண்காணித்து வருகின்றனர். இது வரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 37 பேர் லோக்நாராயணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் எத்தனை பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற ஒருவர் மதுரைக்குத் திரும்பிய பிறகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்தினரில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

More News >>