கொரோனா எதிரொலி.. கொல்கத்தா செக்ஸ் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு..

கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. இங்கு அம்மாநிலப் பெண்கள் மட்டுமின்றி, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களும் குடும்பத்தினருடன் குடியேறியிருக்கின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக செக்ஸ் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மாற்றுத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்தாலும் இந்த தொழில் தொடர்ந்து நீடித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக ரெட்லைட் ஏரியா பெண்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வரவில்லை. இதனால், வருமானம் இல்லாமல் இந்த குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசு அந்த குடும்பங்களுக்கு இலவச உணவு, முகக்கவசம் மற்றும் மருத்துவ வசதிகளைச் செய்திருக்கிறது. இது பற்றி, சோனாகச்சி எம்.எல்.ஏ. சாஷி பஞ்சா கூறுகையில், செக்ஸ் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 1500 பெண்களுக்கு அரிசி, பருப்பு, உருளைக் கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களும், முகக் கவசம் மற்றும் மருந்துகளும் அளித்துள்ளோம். நாளை முதல் சமைத்த உணவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.

செக்ஸ் தொழிலாளர் அமைப்பான தர்பார் கமிட்டி செயலாளர் காஜல் போஸ் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்குப் பாதுகாப்பு கருதி, எங்கள் வாடிக்கையாளர்களை நாங்களே வரவேண்டாம் என்று கூறி விட்டோம். மேலும், செக்ஸ் தொழிலில் உள்ள பெண்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதற்குப் போக்குவரத்து வாகனங்கள் இல்லாததால் இங்கேயே இருக்கிறார்கள். மேலும், உணவு, மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றார்.இந்த பெண்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபடும் டாக்டர் சமர்ஜித் ஜனா கூறுகையில், செக்ஸ் தொழிலாளர்கள் ஆறேழு பேர் ஒரு அறையில் வசிக்கிறார்கள். இதனால், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவர்களை வேறொரு இடத்திற்கு மாற்றித் தனிமைப்படுத்திப் பாதுகாப்பாக இருக்கச் செய்ய வேண்டும் என்றார்.

More News >>