தமிழ்நாட்டில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 124 ஆக உயர்வு

டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் உள்பட 57 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 பேராக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், டெல்லியில் நடந்த முஸ்லிம் மாநாட்டின் மூலம் பலருக்கு கொரோனா பரவியது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அந்த அமைப்பின் மஸ்ஜித் ஆறு மாடிக் கட்டிடத்தில்தான் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே இடத்தில் உணவு பரிமாறப்பட்டிருக்கிறது. இதனால், சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1500 பேர் பங்கறே்றிருக்கிறார்கள். அவர்களில் 1131 பேர் திரும்பி விட்டனர். அதில் 515 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தற்போது அவர்களில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருநெல்வேலியைச் சேர்ந்த 22 பேர், நாமக்கல் 12, ராசிபுரம் 5, விழுப்புரம் 3, மதுரை 2, கன்னியாகுமரி 4, தூத்துக்குடி, பரமத்தி வேலூர் தலா ஒருவருக்கு என்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்கள் உள்படத் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்திருக்கிறது.

More News >>