கபசுரக் குடிநீரை இலவசமாக வழங்க முஸ்லிம் லீக் கோரிக்கை..
ரேஷன்கடைகளில் மக்களுக்கு இலவசமாக கபசுரக் குடிநீரை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவனத்தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை வருமாறு:சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேரைப் பலிவாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று வரை 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு முழு மூச்சாக கொரோனா பரவல் தடுப்பில் ஈடுபட்டு வருகிறது. உயரதிகாரிகள், மருத்துவர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை லட்சக்கணக்கானோர் தன்னலமின்றி பணியாற்றி வருவதற்குத் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்தோ, வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாக்கும் மருந்தோ இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணமாகி உள்ளனர். இதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களை நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியினை பெருக்க கபசுர குடிநீரை மக்கள் வாங்குகிறார்கள். இதற்காக ஊரடங்கையும் மீறி அவர்கள் வெளியே வருவதால் கொரோனா பரவல் அதிகரித்து சமூகப் பரவலாகி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே. மக்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் கபசுரக் குடிநீரையோ, தேவையான மூலிகைப் பொருளையோ இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்க வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்,