தப்லிகி ஜமாத் மாநாடு.. கேரளாவில் 22 பேர் தனிமை வார்டுகளில் சேர்ப்பு..

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற கேரளாவைச் சேர்ந்த 22 பேர், புதுச்சேரியில் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 22ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது.

இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக 1131 பேர் டெல்லி மாநாட்டிற்குப் போய் திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் 515 பேர் கண்டுபிடிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதே போல், உ.பி, பீகார் மாநிலங்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலிருந்து நிஜாமுதீன் மாநாட்டுக்குப் போய் விட்டுத் திரும்பிய 22 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி. அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.மேலும், புதுச்சேரியில் 6 பேரும், காரைக்கால் மாவட்டத்தில் 3 பேரும் நிஜாமுதீன் மாநாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்கள். அவர்கள் தனிமைப்படுத்தி, சோதித்து வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். மேலும், மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் யாராக இருந்தாலும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவர் கூறியிருக்கிறார்.

இதே போல், உத்தரகாண்டில் இருந்து 26 பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியிருப்பதாக அம்மாநில டிஜபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

More News >>