டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா தொற்று.. தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் நேற்று(ஏப்.1) வரை 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் 190 பேர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 15ம் தேதி தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் முஸ்லிம் மதமாநாடு நடைபெற்றிருக்கிறது. இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், தமிழக அரசு நேற்று(ஏப்.1) மாலை கூறியதாவது: தமிழகத்தில் 2 லட்சத்து 10,538 பேருக்குச் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 77,330 வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 995 பேர் தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். 4070 பேர் 28 நாட்கள் தனிமையில் இருந்து முடித்துள்ளனர்.
தமிழகத்தில் 11 அரசு லேப், 6 தனியார் லேப் என 17 லேப்களில் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது வரை 2,726 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 1103 பேர் டெல்லி தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் தாமாக முன்வந்து அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 658 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் இது வரை 3371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 22,049 படுக்கைகள் தயாராக உள்ளன.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.