ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது.. 1965 பேருக்குப் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காகி விட்டது. ஊரடங்கு முடியும் 14ம் தேதிக்குள் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடலாம் என்று கூறப்படுகிறது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 1965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 150 பேருக்கு கொரோனா நோய் குணமாகியிருக்கிறது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வார வியாழக்கிழமை(மார்ச்26) வரை நாட்டில் 700 பேருக்குத்தான் கொரோனா பாதித்திருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டு மடங்கைத் தாண்டியுள்ளது. குறிப்பாக, கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, இதே நிலவரம் தொடருமானால், ஊரடங்கு முடியும் 14ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.