கொரோனா எதிரொலி.. தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் கட் இல்லை

கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பிறமாநிலத் தொழிலாளர்களுக்காக குருநானக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.3) காலை பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:ஊரடங்கால் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. இருந்தாலும் பல மளிகைச் சாமான்கள் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டியிருக்கிறது. பிற மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனால்தான், சாமான்கள் கொண்டு வருவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு, தட்டுப்பாடு காணப்படுகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தரப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்காக டோக்கன் கொடுத்து வீடுகளிலேயே பொருட்கள் வழங்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால், அரசுக்கு ஜிஎஸ்டி வரி வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு நிதிநெருக்கடி உள்ளது. ஆனாலும், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இந்த மாதம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது. அதே போல், தமிழகத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இந்த ஊரடங்கு நேரத்திலும் பணியாற்றி வருகின்றனர். எனவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 முதல் 75 சதவீதம் வரை கட் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சம்பளம் கட் இல்லை என்பது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

More News >>