கொரோனா பரவாமல் தடுக்க சிங்கப்பூரில் ஏப்.7 முதல் ஒரு மாதம் ஊரடங்கு..

சிங்கப்பூரில் வரும் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு மேல் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் இந்த நோய் 2100க்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. இது மேலும் பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால், அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. வரும் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் லீ சியான் லூங் அறிவித்துள்ளார்.அத்தியாவசியத் தேவைகள் மற்றும் முக்கியமான சேவைகள் தவிர மற்ற வர்த்தக, தொழில், அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் கொரோனா நோயால் 5 பேர் பலியாகியுள்ளனர். 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சங்கிலியை உடைக்கும் வகையில் மக்கள், சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக விலகல் விதிகளை மீறுவோர்களுக்கு 6 மாதச் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

More News >>