ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்க முடிவு
மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஸ்தியை, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி அவர் தங்கியிருந்த ஓட்டலின் குளியளரை தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி கடந்த மாதம் 24ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தபோதிலும், அவர் குற்றச்சம்பவத்தின் அடிப்படையில் இறக்கவில்லை என்று அவரது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவரது உடல் கடந்த 28ம் தேதி மும்பைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், பொது மக்களின் பார்வைக்காக அந்தேரி செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடிகை ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டது. பின்னர், அன்று மாலை அவரது உடல் அம்மாநில அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், போனி கபூரும் அவரது குடும்பத்தினரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்த கடற்கரையில் ஸ்ரீதேவியின் அஸ்தி கரைக்கப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.