கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 2வது பலி

விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்ந்தது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், தமிழகத்தில் 411 பேருக்குப் பாதித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி கடந்த வாரம் உயிரிழந்தார். அவர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர் என்பதும், அங்குத் தாய்லாந்து நாட்டினர் மூலம் அவருக்கு கொரோனா பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகுதான், அம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். அதில், 364 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில், விழுப்புரத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான் (51). இவரும் நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர். கொரோனா தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

More News >>