இந்தியாவிடம் மருந்து கேட்கும் அமெரிக்கா.. மோடியிடம் டிரம்ப் கோரிக்கை

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, மாத்திரைகள் வழங்குமாறு இந்தியாவிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தியப் பிரதமர் மோடியிடம் பேசியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்நோய் பரவியிருக்கிறது. அங்கு இது வரை கொரோனாவுக்கு 8,175 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு இது வரை மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின், கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்களுக்கு மேற்கொண்டு பரவாமல் தடுத்து உயிர் பிழைக்க வைப்பதாக அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மருந்து, மாத்திரைகளை எல்லா நாடுகளும் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் சாதாரணமாகப் பருவ காலங்களில் மலேரியா காய்ச்சல் பரவக்கூடியது என்பதால், அதிகமாக குளோரோகுயின் தயாரித்து வருகிறோம். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அது பயன்படுகிறது என்பதால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 25ம் தேதி தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பெற ஏராளமான ஆர்டர் கொடுத்துள்ள அமெரிக்கா இந்த தடையை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசினார்.இது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:இந்தியாவிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அளிக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டிருக்கிறேன். 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவுக்கும் அதன் தேவை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம், அதிகமாக கொரோனா பரவியிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத்தான் உடனடி தேவை ஏற்படும். எனவே, அதை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டிருக்கிறேன். அவரும் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

More News >>