கொரோனா பாதிப்பு.. படேல் சிலையை விற்க ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம்.. குஜராத் போலீசார் வழக்கு...

கொரோனா தடுப்புக்காக மருத்துவமனை கட்டவும், மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும் பணம் தேவை என்று கூறி, படேல் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓ.எல்.எக்ஸ்.சில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குஜராத்தில் கேவடியா பகுதியில் நர்மதா ஆற்றங்கரையில் சர்தார் வல்லபாய் படேல் சிலை உள்ளது. உலகிலேயே மிக உயரமான இந்த சிலையைக் கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சிலையைக் காண்பதற்குத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்தியாவில் 4067 பேருக்கு இந்நோய் பரவியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிய போதிய அளவில் மருத்துவ உபகரணங்களும், மருத்துவமனை வசதிகளும் இல்லை என்று பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத்தில் ஒருவர் ஓ.எல்.எக்ஸ் ஆன்லைன் விற்பனை தளத்தில் ஒரு விளம்பரம் செய்திருக்கிறார். அதில், கொரோனா சோதனைக்கான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கும், மருத்துவமனைகள் கட்டுவதற்கும் பணம் தேவைப்படுகிறது என்றும், இதனால் ரூ.30 ஆயிரம் கோடிக்கு படேல் சிலை விற்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது பற்றி ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.இதையடுத்து, குஜராத் போலீசார் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இ.பி.கோ, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

More News >>