ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட்..

கொரோனா தடுப்பு நிதிக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதம் கட் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. நாடு முழுவதும் 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு நிலவரம் குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதித்தது. பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா பாதிப்பு, ஊரடங்கால் பாதிப்பு ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது. இதனால், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்களின் சம்பளத்தில் இந்த ஆண்டு முழுவதும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். மேலும், எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்படும். இதற்கான ரூ.7900 கோடி நிதி, மத்திய அரசின் நிதியில் சேர்க்கப்படும். இதற்கான முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன என்றார்.

More News >>