மோடி சிறந்த மனிதர்.. பல்டி அடித்த டிரம்ப்..

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளைத் தருவதாக இந்தியா அறிவித்தது. இதையடுத்து, மோடி நல்ல மனிதர், சிறந்த மனிதர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாகப் பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு அந்த மருந்து, மாத்திரைகளைத் தர வேண்டுமென்று ஏற்கனவே பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.

இதன்பின், இந்தியாவின் ஏற்றுமதி தடையைக் கேள்விப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்ய மறுத்தால் ஓ.கே.தான். ஆனால், அதற்கான அமெரிக்காவின் பதிலடி நிச்சயம் இருக்கும் என்று மிரட்டல் விடுத்தார். இதைத் தொடர்ந்து, இந்திய அரசு ஒரு முடிவெடுத்தது. கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அவசரத் தேவைகளுக்காக பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பேச்சை மாற்றிக் கொண்டார். அவர் கூறுகையில், அமெரிக்காவுக்கு சுமார் 3 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியுள்ளோம். இவற்றில் பெரும்பகுதி இந்தியாவில் இருந்து வருகிறது. பிரதமர் மோடியிடம் நான் பேசினேன். அவர் உண்மையில் நல்லவர்.அவர் சிறந்த மனிதர் பலரும் பல்வேறுவிதமாகப் பேசுவார்கள். ஆனால், நான் நல்ல விஷயங்களை மட்டுமே கேட்பேன். தடுப்பு மருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும். எந்தெந்த நாடுகளில் மலேரியா சாதாரணமாக காணப்படுகிறதோ, அந்த நாடுகளில் கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றார்.

More News >>