500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி..

சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு திமுகவினர் உள்பட பல்வேறு கட்சியினரும் உதவி வருகின்றனர்.திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணியன் கோயில் தெரு, பஜார் ரோடு ஆகிய பகுதிகளில் நிலைமை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் மளிகைப் பொருட்கள் மக்களுக்கு பிரச்சனை இல்லாமல் கிடைக்கிறதா, அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். மேலும், வீட்டை வெளியே வரும்போது எல்லோரும், 'தனிமனித இடைவெளியை' பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது குறித்தும் விசாரித்தறிந்தார்.

பின்னர், சுப்ரமணியன் கோயில் தெரு பஜார் ரோடு பகுதியில், கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தார். 'டிசம்பர் 3 இயக்கத்தின்' மூலம் அவர்களது வீடுகளில் நேரடியாக வழங்கிடுமாறு கூறி, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் பேரா.தீபக்கிடம் ஒப்படைத்தார்.

More News >>